தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்களை விற்றதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா,சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. வழக்கு தொடர்பாக அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காதவர்கள் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அனைத்து சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டுள்ள சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் குட்கா முறைகேடு வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சில சாட்சிகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட சாட்சிகள் ஏற்கனவே மனுதாரருக்கு வழங்கப்பட்டு விட்டதால் மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து முன்னாள் ஆணையர் ஜார்ஜின் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும் குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.