அரசியல்
" மக்களால் புறம் தள்ளப்பட்ட" அரசியல்வாதி மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார்: தவெக எம்எல்ஏ விளாசல்
அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்களால் புறம் தள்ளப்பட்ட அரசியல் மகா நடிகன் என தவெக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை:
2026 சட்டமன்ற தேர்தலில் 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுரை எழுதி விட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் அங்கீகாரம் அளித்து இருக்கிறார்கள். உலக தமிழர்களின் ஓட்டு மொத்த பிரதிநிதியாக மாண்புமிகு தமிழக முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்று இருக்கிறார்.
எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறீர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 167 தொகுதிகளில், 108 தொகுதிகளில் தனது டெபாசிட்டை இழந்து விட்டதை மறந்து விட்டு ஆர்,பி.உதயகுமார் புறம் பேசி வருகிறார்.
திருமங்கலம் தொகுதியில் களமிறங்கிய உங்களை மக்கள் அங்கீகாரம் அளிக்காமல் புறந்தள்ளி இருக்கிறார்கள் என்பதை மாஜி மாண்புமிகு ஆர்.பி.உதயகுமார் மறந்து விட்டு, இன்னும் பழைய நினைப்பில் பிதற்றி கொண்டு இருக்கிறார். அரசியலில் மகா நடிகன் என பெயர் எடுத்த நீங்கள் , அரசியல் பிழைப்பொழுது விடிந்தால் ஒரு வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக்கி கொண்டு இருக்கிறீர்கள்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் மட்டும் பூர்த்தி அடைந்து உள்ளது. அதற்குள் அவதூறுகளை வாரி இறைத்து ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விடலாம் என உங்களின் பகல் நனவு ஒரு போதும் நிறைவேறாது. மக்கள் தமிழக வெற்றிக் கழகம் மீதும் மாண்புமிகு முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கி கொழுத்த அரசியல்வாதிகளுக்கு கடிவாளம் போடும் வேலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துரிதப்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசில் நிர்வாக சீர்திருத்தத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
லஞ்சம், ஊழல் இல்லாத தூய்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்கள். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திடமாகவும் இருக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடங்கி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரித்தது என்பதை பட்டியல் போட்டு காட்ட முடியும். ஆனால் குறை சொல்வதை நிறுத்தி கொண்டு மக்கள் பணி செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
ஜெயலலிதா அம்மா இருந்த வரை அவரை தூதி பாடி அமைச்சர் பதவி பெற்ற நீங்கள். அவர் மறைந்த 15 நாட்களுக்குள் சசிகலா அம்மையார் அவர்களை பொதுச்செயலாராக, முதலமைச்சர் ஆக்க வேண்டும் என திரைக்கதை எழுதியதை யாரும் மறந்து விடவில்லை.
அதற்கு பின்னர் அந்தர் பல்டி அடித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கள் காவடி தூக்கியதையும் நாங்கள் மறந்து விடவில்லை. தினம் தினம் நீங்கள் அரங்கேற்றும் அரசியல் நாடகத்தில் திரைக்கதை, வசனங்கள் "மக்களுக்கு புளித்து போய்விட்டது".
இனியாவது அவதூறுகள் பரப்புவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமான அரசியலில் ஆர். பி. உதயகுமார் ஈடுபட வேண்டும். நாவடக்கம் இல்லையென்றால் நிரந்தரமாக மக்களால் புறம் தள்ளப்பட்டு விடுவீர்கள் என்பதை ஆர்.பி.உதயகுமார் அவர்கள் களநிலவரம் புரிந்து அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.