மகா[ன்]பிரசாதம்
மகாபெரியவா ஒரு சமயம் சின்னக் குழந்தையாட்டம், தீபாவளியன்னிக்கு கம்பி மத்தாப்பு ஏத்தி சிரிச்சுண்டு இருந்தார். அப்போ சிலபேர், "பெரியவா, புராண காலத்துல எல்லாம் மத்தாப்பு கிடையாது... இந்த மாதிரி சந்தோஷமும் கிடையாது இல்லையா?" அப்படினு கேட்டா. மென்மையா அவாளைப் பார்த்து சிரிச்சார், பெரியவா. தீபம்னா விளக்கு ஆவளின்னா வரிசை. அதாவது, வரிசையா விளக்கேத்தி வைக்கற துன்னுதான் அர்த்தம்.
இதுல எங்கே மத்தாப்பு சொல்லியிருக்கு? இன்னும் சொல்லப்போனா, நரக சதுர்த்தசிதான், சத்யபாமாவோட கையால நரகாசுரன் அழிஞ்ச நாள். அந்த நாள்ல ரொம்ப பிரதானமானது கங்கா ஸ்நானம்தான். அதுவும் நல்லெண்ணெயை வைச்சுண்டு, அரப்புப்பொடி தேய்ச்சு ஸ்நானம் பண்ணணும். அன்னிக்கு ஜலத்துல கங்கையும் அரப்புப்பொடியில சரஸ்வதியும் நல்லெண்ணெய்ல மகாலக்ஷ்மியும் வாசம் செய்யறதா ஐதிகம்.
அதை தீபாவளின்னு சொல்லிண்டு விளக்கேத்தி வைக்கறதெல்லாம், நரகாசுரன் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு கேட்டுண்டதோட ஐதிகமா வந்ததுதான். விரதம், பூஜைன்னா. அதுல சம்பிரதாயம் மாறாம இருக்கறது, முக்கியம். ஆனா, பண்டிகைனு சொல்லிட்டா, அதுல காலத்துக்கு ஏத்த மாதிரி அப்டேஷன், சேஞ்சஸ் எல்லாம் சேர்ந்துண்டேதான் இருக்கும்.
தீபாவளி சமயத்துல மத்தாப்பு, பட்சணம், புது வஸ்த்ரம் இதெல்லாம் அவா அவா வசதிப்படியானது. ஆனா, தீபாவளியோட தத்துவம் என்னன்னா, கெட்டது அழிஞ்சு, நல்லது கொண்டாடப் படணும்கறதுதான். அதைப் புரிஞ்சுண்டு, நாம வெளியில இந்தக் கொண்டாட்டத்தையெல்லாம் ஆசைக்கு நடத்திண்டு, அகத்துக்குள்ளே இருக்கிற இருட்டை அழிச்சுண்டு, எல்லாரோடும் இணக்கமா, எந்த விகல்ப பேதமும் இல்லாம இருப்போம்னு சபதம் எடுத்துக்கறதுதான்.
இதைப் புரிஞ்சுண்டாலே போதும். விளக்குங்கற புற வெளிச்சம் இல்லாமலே வாழ்க்கை வெளிச்சமா இருக்கும். தெனம் தெனம் தீபாவளியாட்டம் ஆனந்தம் நிறையும்!"
(ஜெயாப்ரியன்)