சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சொந்தமாக தறிக்கூடம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் வாடகைக்கு தங்கி அப்பகுதியில் உள்ள மற்றொரு தறிக்கூடத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
வடமாநில இளைஞர்கள் தாக்குதல்
இந்நிலையில் கடந்த மே 23ஆம் தேதி இரவு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேரும் வீட்டில் மதுபோதையில் அதிகமாக சத்தம் போட்டுக் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு உரிமையாளரான கோவிந்தராஜ் ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் ஒழுங்காபடுத்து தூங்குங்கள் என கூறியுள்ளார்.அப்பொழுது அவரிடம் வடமாநில இளைஞர்கள் ஐந்து பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அதில் திடீரென ஐந்து பேரும் சேர்ந்து கோவிந்தராஜை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டபோது தரையில் கிடந்த கல்லின் மீது கோவிந்தராஜ் விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனை அறிந்த அவரது மகன் வெங்கடேஷ் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் உயிரிழப்பு
இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காததால் மீண்டும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் கோவிந்தராஜ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ராஜேந்திரகுமார்(21), அஜய்பிந்த்( 25), சங்கர்பிந்த்(25), லவ்குமார்(24), குந்தன்குமார்(18) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.