Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By Jayakumar
06 Apr 2025, 01:59 PM
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.அதிகபட்சமாக வேலூரில் 37.8° செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- மதுரையில் 19.2° செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

கனமழை பெய்ய வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

நாளை முதல் ஏப்.12ம் தேதி வரை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.