Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னை மலர் கண்காட்சி.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By nagalekshmi
02 Jan 2025, 11:59 AM
சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மலர் கணகட்சியை 44 ஆயிரத்து 888 பேர் அப்போது பார்வையிட்டனர். 

இரண்டாவதாக கடந்த 2023-ஆம் ஆண்டு செம்மொழி பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை  23 ஆயிரத்து 302 பேர் பார்வையிட்டனர். மூன்றாவது மலர் கண்காட்சி கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 27 பேர் பங்கேற்று மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, நான்காவது மலர் கண்காட்சி செம்மொழி பூங்காவில் இன்று (ஜன.2)  தொடங்கி ஜனவரி 11-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. 50 வகையான மலர்களுடன் 30 லட்சம் மலர் தொட்டிகளுடன் இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானை, மயில், ரயில், ஆமை, படகு, வண்ணத்துப்பூச்சி, இதயம், அன்னப்பறவை, நடனமங்கை என 20 வகையான வடிவங்களில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நான்காவது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். முன்னதாக, நேற்று புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவால் செம்மொழிப் பூங்கா கைவிடப்படுமா என்ற கேள்விக்கு  செம்மொழிப் பூங்காவிற்கும், கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கும் இணைப்பு பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.