Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் கைவரிசை - 3 பேர் கைது!

By VASUKI
26 May 2025, 04:19 PM
சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, திருவல்லிக்கேணி, கபாலி நகர் பகுதியில் வசித்து வரும் நரேன்குமார் என்பவர் Hitachi ATM Service நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று மேற்கண்ட நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து நரேன்குமாரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள SBI ATM சென்டரில் ஏதோ தவறு நடந்துள்ளது. ஆய்வு செய்யுமாறு கூறியதின் பேரில், நரேன்குமார் மேற்படி SBI ATM சென்டரில் ஆய்வு செய்து போது, யாரோ பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியே வராமல் தடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து நரேன்குமார் திருவான்மியூர்காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் சம்பந்தப்படட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உதவி ஆணையாளர் நீலாங்கரை மற்றும் திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்யப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து, சம்பவயிடத்தில் கிடைத்த தகவல் தொழில் நுட்ப பதிவுகள் மற்றும் ATM கண்காணிப்பு குழுவினருடன் ஒருங்கிணைந்து மேற்கண்ட தொடர்புடைய கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். திருவான்மியூர் மட்டுமில்லாமல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இதில் தொடர்புடைய நபர்கள் பதிவுகளை பெற்று குல்தீப் சிங், பிரிஜ்பான், சுமித் யாதவ், ஆகிய மூவரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் நபர்கள் ATM இயந்திரத்தின் முதல் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து, பணம் வரக்கூடிய இடத்தில் ஒரு கருப்பு நிற அட்டையை வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு சென்று, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கப்படாமல் இருப்பதை உள் நுழைந்து எடுத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வாடிக்கையாக கொள்ளையடித்து வருவதும் உபேர், ஓலா செயலி மூலமாக கார்களை புக் செய்து இரயில் நிலையங்களுக்கு சென்று ஒவ்வொரு முறையும் உத்திரப்பிரதே மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.

கூகுள் மேப்பை பயன்படுத்தி உத்திரபிரதேசத்தில் எங்கெங்கு எஸ்பிஐ ஏடிஎம் உள்ளது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுவும் பணம் அதிகம் எடுக்கும் ஏரியாக்கள், பணக்கார ஏரியாக்கள் எங்குள்ளது என்பதை கூகுள் மூலம் தெரிந்து கொண்டு அந்தப் பகுதியில் ஏடிஎம்கள் கண்டிப்பாக அதிகமாக வைக்கப்பட்டிருக்கும் என்பதை கணித்து இந்த செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூகுள் மேப்பில் எங்கு அதிக ஏடிஎம் இயந்திரங்கள் இருப்பதாக காட்டப்படுகிறது அங்கே முதலில் சென்று கொள்ளையடிக்க செல்வார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பழமையான எஸ்பிஐ ஏடிஎம்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையர்கள் கொள்ளை அடிச்ச சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். சாவி பயன்படுத்தி இயந்திரத்தை திறக்கும் வகையிலான ஏடிஎம் இயந்திரங்களில் இந்த கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர். உத்திர பிரதேசத்தில் இருந்து சென்னை வந்த பிறகு உபர் மற்றும் ஓலா செயலி மூலமாக கூகுள் மேப்பை பயன்படுத்தி ஒவ்வொரு ஏடிஎம் ஆக சென்று ரெக்கி ஆபரேஷன் என்ற அடிப்படையில் நோட்டமிட்டது தெரியவந்துள்ளது.

முகமூடி உள்ளிட்டவற்றை அணிந்து வந்தால் இது போன்று கள்ளச் சாவி பயன்படுத்தி ஏடிஎம் ஐ திறப்பது குறித்து வங்கிக்கு தெரிந்து விடும் என்பதால் சாதாரண வங்கி வாடிக்கையாளர்கள் போல் ஏடிஎம்மில் நுழைந்து கள்ளச் சாவி போட்டு திறந்து பணம் வரும் இடத்தில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அட்டையை ஒட்டி விட்டு செல்வது தெரியவந்துள்ளது.

முன்னதாக தங்கள் சொந்த ஊரிலேயே இது போன்று இருக்கும் பழைய ஏடிஎம் இயந்திரங்களில் எந்த மாதிரியான சாவியை பயன்படுத்தினால் திறக்கும் என்பதை கண்டறிந்து அதற்கென சாவியை தயாரித்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எல்லா இயந்திரங்களும் ஒரே மாதிரியான சாவிகள் மூலம் திறக்கப்படும் வகையில் இருந்த காரணத்தினால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கைவரிசை காட்டியுள்ளனர்.

சந்தேகம் வராமல் இருக்க ஒவ்வொரு ஏடிஎம் சென்று பிறகு வேலை முடிந்தவுடன் மற்றொரு உபர் அல்லது ஓலா மூலம் வாடகை வாகனத்தை புக் செய்கின்றனர். குறிப்பாக வாடிக்கையாளர் டெபிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் பின் செலுத்தி பணத்தை எடுக்க முயற்சிக்கும் பொழுது பணம் வெளிவரும். பணம் வெளிவரும் போது இந்த அட்டை பணத்தைப் பிடித்துக் கொள்வது வகையிலாக கொள்ளையர்கள் ஒட்டி வைப்பார்கள். ஏடிஎம் இயந்திரம் பணத்தை யாராவது எடுப்பது போன்ற டெக்னிக்கலாக உணரும் பொழுது மீண்டும் பணம் உள்ளே செல்லாது. அப்போது கொள்ளையர்கள் வைத்திருக்கும் அட்டையில் மாட்டிக் கொண்ட பணத்தை வாடிக்கையாளர்கள் சென்ற பிறகு திருடி செல்வது தெரியவந்துள்ளது. சென்னை உட்பட பல இடங்களில் ரெக்கி ஆபரேஷன் நடத்தி பல இடங்களில் நோட்டமிட்டு பழைய மெஷின்கள் இருக்கும் இடத்தில் மட்டும் இந்த கைவரிசியை காட்டி உள்ளது தெரிய வந்துள்ளது.

இதுவரை வங்கி தரப்பில் இருந்து எவ்வளவு பணம் இதுபோன்று கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படாததால் கொள்ளையர்கள் எவ்வளவு பணத்தை கொள்ளையடித்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது.தற்போது இது போன்ற பழைய மெஷின்கள் எத்தனை உள்ளது என்பது குறித்து பட்டியலை எஸ்பிஐ நிர்வாகத்திடம் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

இவர்களோடு தொடர்பில் இருக்கும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து கள்ளச்சாவி, கருப்பு நிற ஸ்டிக்கர், இருபக்க டேப்ஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.