Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

By VASUKI
03 Oct 2025, 01:49 PM
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்துக் காட்டமாகப் பேசினார்.

கரூர் சம்பவமும் விஜய்யின் காலதாமதமும்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையையும், விஜய்யின் செயல்பாட்டையும் அப்பாவு ஒப்பிட்டுப் பேசினார். முதலமைச்சரின் செயல்பாடு: கரூர் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் தமிழக முதல்வர் உறக்கம் இல்லாமல் நள்ளிரவில் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

விஜய் மீது குற்றச்சாட்டு: விஜய் சதி செய்து காலதாமதத்தை ஏற்படுத்திக் கரூர் வந்ததாலேயே இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டது. 19 அடி அகலம் உள்ள சாலையில் 12 அடி அகலம் உள்ள பேருந்தை நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டது. விஜய் வரும்போதே பத்தாயிரம் பேரை உடன் அழைத்து வருகிறார். உள்ளூர் மக்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் முண்டியடிக்கும் சூழல் உருவானது.

விஜய்யின் நடவடிக்கை:

பிரச்சாரப் பகுதிக்குக் காலதாமதமாக வந்த விஜய் ஏழு நிமிடம் ஷூட்டிங் முடித்துவிட்டு 41 பேர் உயிரைக் குடித்துவிட்டுத் தனி விமானம் ஏறிச் சென்று பனையூரில் பதுங்கி விட்டார். கூட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கட்சியின் தலைவன் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்திருக்க வேண்டும். கட்சி கூட்டத்தில் நடந்த நிகழ்விற்கு அவரது கட்சிக்கொடியை அறக்கம்பத்திலாவது பறக்கவிட்டு இருக்க வேண்டும். ,ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பின்னரே அவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகக் காணொளியை வெளியிட்டார் என்றும் அப்பாவு விமர்சித்தார்.

விஜய்யின் அரசியல் குறித்து அப்பாவு

நடிகர் விஜய்யின் அரசியலானது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்குகிறது என்றும் அப்பாவு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். சினிமாவில் ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொண்டிருந்த விஜய், அமித்ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு அரசியலில் நடிக்கக் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். 50 வயதில் விஜய் தான் அங்கிள், ஆனால் அவர் எல்லாரையும் 'அங்கிள் அங்கிள்' எனச் சொல்லி வருகிறார்.

நடவடிக்கை உறுதி

கரூர் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்தார். கரூர் விவகாரத்தில் அவர் (விஜய்) தவறு செய்திருந்தாலும், அவரை வழி நடத்தியவர் யாராக இருந்தாலும் இந்த அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தனக்கும் விஜய்யின் காமெடிகள் பிடிக்கும் என்று கூறிய அப்பாவு, தி.மு.க.விற்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) நேரடியாகத் தொடர்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.