அரசியல்

தி.மு.க.வுக்கு ஷாக் கொடுத்த சந்தீப் ஆனந்த்... ஜெகத்ரட்சகன் தலைமறைவா? புதிய அரசியல் பரபரப்பு!

By Sumalekha
12 Jul 2026, 02:00 PM
ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதைச் சுற்றி பல்வேறு அரசியல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அ. தி.மு.க.வை மொத்தமாக காலி செய்வதையே மெயின் டார்கெட்டாக வைத்திருப்பவர் முதல்வர் இன்னும் தி.மு.க. பக்கம் திரும்பாத போதும். வான்டடாக தி.மு.கவின் மூத்த தலைவரும் அரக்கோணம் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் முதல் ஆளாக த.வெ.கவில் ஐக்கியமாகியிருப்பதைப் பார்த்து கொந்தளித்துக் கிடக்கிறது தி.மு.க. தலைமை. அவரது தந்தையும் வெளியுலகிலேயே தலைகாட்டாமல் இருக்கும் நேரத்தில், கடந்த சில நாட்களாக அவரின் மகனும், தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு சென்று விட்டார் என்பதுதான் அண்ணா அறிவாலயத்தில் ஹாட் டாக்!

இதுகுறித்து ஜெகத்ரட்சகன் எம்.பி.யுடன் நீண்டகால நட்பில் இருக்கும் சிலரிடம் பேசினோம். *மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அன்பை பெற்றிருப்பவர் ஜெகத்ரட்சகன். இன்றைய தேதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளராகவோ, பொருளாராகவோ தேர்வாகும் இடத்தில் இருக்கிறார். மேலும், தி.மு.க. வரவு தேர்தல் கால பட்டுவாடா என கையாளக்கூடியவர். இவ்வளவு செல்வாக்கு மிகுந்த யோடு 'தீயசக்தி, 'அப்பாவைக் காணோம்' கேப்!

ஒரு தலைவரின் மகனே, திமுகவை என கிண்டலடித்தவரின் கட்சியில் சேர்கிறார் என்றால், தி.மு.க. தலைமைக்கு எந்தளவுக்கு அவப்பெயர் ஏற்படும். விஜய் முதல்வராக பதவியேற்ற நாளிலேயே புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து த.வெ.க.வில் சேர்வது தொடர்பாக, ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அவரின் ஆசையை விஜய்யிடம் நேரடியாகவே சொல்லி சம்மதம் பெற்றிருக்கிறார் ரங்கசாமி. மூவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஜெகத்ரட்சகனுக்கும் தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவருமே தனது மகன் தவெ.க.வில் சேர்வதை மானசீகமாக ரசித்திருக்கிறார்.

ஆனால், இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருந்த ஜெகத்ரட்சகன், தன் மகன் தவெ.கவில் சேர்வதைப் பற்றி முன்கூட்டியே எனக்குத் தெரியாது என்று தி.மு.க தலைமையிடம் பொய் சொல்லியிருக்கிறார். இருவரின் நடிப்பையும் கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் உச்சக்கட்ட கோபம் அடைந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே இருவரையும் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்காமல், சென்னையில் தங்கியிருப்பதை தவிர்த்து ஜெகத்ரட்சகன் பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டார்.

ஆனால், அதற்கு முன்பாக தன்னை சந்தித்த நீண்டகால நண்பர்களிடம் அவர் புலம்பியதுதான் அவரது நாடகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. அதாவது, 'த.வெ.க.வில் என் மகன் சேரப்போகிறார் என்ற தகவல் வெளியான அடுத்த நொடியே அவரது செல்போனில் தொடர்புகொண்டேன். ஆனால், அழைப்பை ஏற்கவில்லை. த.வெ.கவில் சேர்ந்ததும் கடந்த ஜூலை 4ம் தேதியிலிருந்து வீட்டிற்கே வரவில்லை.

என் மகனை விசாரித்து எனக்கு வருகிற போன் கால்களுக்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை. எங்கள் நிலைமையை புரிந்துகொள்ளாமல், நான்தான் சந்தீப்பை தவெகவில் சேரச் சொல்லி வழியனுப்பி வைத்தேன் என்று பேசுகிறார்கள். எங்குமே தலைகாட்ட முடியாத சோகத்தில் இருக்கிறேன். அதனால் பாண்டிச்சேரிக்கு புறப்பட்டு கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்க யோசிக்கிறேன்' என்று தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்” என்று விவரித்து முடித்தார்கள்.

சந்தீப் ஆனந்தின் நெருங்கிய நட்பு வட்டத்தில் பேசினோம். "சந்தீப்புக்கு தமிழக அரசியலில் பெரிதாக ஆர்வமில்லை. அவரது நிர்வாகத்தில் உள்ள டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவருக்கு முக்கியமாக இருக்கிறது. புதிய ஆட்சியாளர்களின் எதிர்ப்பை சமாளித்து தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை காப்பாற்றுவது என்பது மிகவும் கடினம் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். எந்த இடையூறும் வந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ளவே த.வெ.க.வில் அவர் ஐக்கியமாகிவிட்டார்.

கடந்த ஜூலை 4ம் தேதி அவர் பனையூர் சென்றதும், முதல்வர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் ஐக்கியமானார். அதன்பிறகு எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. முதல்வருடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்கூட ஊடகங்களில் பெரிதாக வரவில்லை. ஆனால், தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் அவரவர் ஊர்களில் தவெக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார்கள். ஆனால் அதற்கு மாறாக, கிட்டத்தட்ட சந்தீப் ஆனந்தின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருக்கின்றன. மேலும் அவரது தனிப்பட்ட செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டே இருக்கின்றன” என்று கூறினார்கள்.

தலைமறைவாகிவிட்டார் எனும் அளவுக்கு ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடுகளில் நியாயம் இருக்கிறதா என வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தியிடம் கேட்டோம். "தமிழகத்தில் இன்றைக்கு வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் நம்பர் 1 பணக்காரர் ஜெகத்ரட்சகன் தான். சொத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை தவிர அவருக்கும் அவரின் மகனுக்கும் வேறு எந்தவொரு பொதுநலனும் இருக்க வாய்ப்பே இல்லை.

அவர் எம்.பி.ஆக இருப்பதே மத்திய பா.ஜ.க. அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து, தனது சொத்து சாம்ராஜ்யத்தை மேலும் பெரியளவில் வளர்த்தெடுக்கவும், காப்பாற்றிக்கொள்ள அவரின் மகனுக்கும் அதே சிந்தனைதான். அவர்களை நம்பிய தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான் இப்போது அவமானப்பட்டு நிற்கிறார்" என்று குமுறினார்.

தொடர்ந்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். "திமுகவில் இருந்து யார் விலகினாலும் கட்சிக்கு துளியளவும் இழப்பு இல்லை. யார் வெளியேறினாலும் அதைப்பற்றி கவலைப்படுகிற இடத்தில் நாங்கள் இல்லை" என்றார். பயன்படுத்துகிற நிறைவாக சந்தீப் ஆனந்திடம் விளக்கம் பெற அவர் இரண்டு செல்போன்களிலும் நாம் தொடர்புகொண்டும், இணைப்பில் வரவில்லை. வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்த தகவலுக்கும் இந்த இதழ் அச்சுக்கு செல்லும் வரை பதில் கிடைக்கவில்லை.

தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை!