அயோத்தி ராமர் கோயிலின் உண்டியல் பணம் ஐயாயிரம் கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த ராம பக்தர்களையும் அதிரவைத்திருக்கிறது. இதுதொடர்பாக இரு நிர்வாகிகள் ராஜினாமா செய்யவைக்கப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், 'யோகி ஆட்சிக்கு ராமரே வேட்டு வைப்பார்' என உத்தரப்பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி முகமான அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது, அரசியல் அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரம் பா.ஜ.க. ஆன்மிக அரசியலின் ஆணிவேர். ராமர் பிறந்த பூமி என்று சொல்லி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயிலைக் கட்டியது பா.ஜ.க. தொடர்ந்து, 3,500 கோடி ரூபாய் செலவில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, 2024ல் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. இந்தக் கோயிலை ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வகித்துவரும் நிலையில், தினமும் இங்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை வருகிறார்கள். ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்தநிலையில்தான் அயோத்தி கோயில் உண்டியலிலிருந்து கோடிக்கணக்கான பணம் திருடுபோயிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுகுறித்து அயோத்தியில் உள்ள பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம். “கடந்த மாதம் அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் எண்ணும் உறுப்பினர் மஹிபால்சிங் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார், அதில், 'கோயில் உண்டியலில் பணம் எண்ணும் சிலர் டீக்கடை நடத்திவந்தாலும், பல கோடிக்கு அதிபதிர்களாக உள்ளனர். ராமரின் உண்டியல் பணமே அவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியிருக்கிறது' என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவை, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பதிந்து, 'இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகிகள் எந்த விளக்கமும் அளிக்க தயாரில்லை. நீதிமன்றம் தானாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும்' என்று கொளுத்திப்போட விவகாரம் பற்றி எரியத் தொடங்கியது. கூடவே, அயோத்தி தொகுதி சமாஜ்வாடி கட்சி மாஜி எம்.எல்.ஏ. பவன் பாண்டே, 'ராமர்தான் தனது கோயில் உண்டியல் பணத் திருட்டைக் கண்டுபிடிக்க அகிலேஷ் யாதவை கருவியாக்கியிருக்கிறார். கோடிக்கணக்கான பணம் மட்டுமல்ல. தங்க நகைகள், தங்க செங்கல்களும்கூட திருடுபோயிருக்கின்றன' என்று சொல்லி பரபரப்பைக் கூட்டினார்.
அகிலேஷ் யாதவும் விடாமல் தொடர்ந்து ஏழு முறை இவ்விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிடவே, முதல்வர் யோகி ஆதித்யநாத் டென்ஷன் ஆகிவிட்டார். உடனே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தார். இக்குழு அயோத்திக்கு சென்று விசாரணையைத் தொடங்கியதும், ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் உடனடியாக ராஜினாமா செய்தனர். 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 80 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது” என்றவர் இவர்கள் உண்டியல் பணத்தை எப்படி திருடியிருக்கிறார்கள் என்பதை விவரித்தார்.
"கோயில் முழுக்க ஐம்பது உண்டியல்கள் இருக்கின்றன. மாதம் ஒருமுறை எண்ணி வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு உண்டியலிலும் 15 கோடி ரூபாய் வரை சேர்வதால், அதை எண்ண போதிய ஊழியர்கள் இல்லை. எனவே ஸ்டேட் வங்கியே பணத்தை எண்ண அனுமதி கொடுக்கப்பட்டது. அவர்கள் இதற்கென்றே 40 ஊழியர்களை நியமத்திருக்கிறார்கள். அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராயின் பரிந்துரையின்பேரில்தான் உண்டியல் திருட்டிற்கு மூளையாகச் செயல்பட்ட டின்னு யாதவ், அவரின் மைத்துனர் அனுகல்ப் மிஸ்ரா ஆகியோர் பணம் எண்ண சேர்க்கப்பட்டார்கள். டின்னு யாதவ்தான் அனுகல்ப் மிஸ்ரா உள்ளிட்ட ஏழு பேரை தேர்வு செய்திருக்கிறான், பணத்தை எண்ணும்போது ஒருவன் மட்டும் நீளமான ஜிப்பா அணிந்துவருவான். ஜிப்பாவிற்குள் பெரிய பாக்கெட் இருப்பது வெளியில் தெரியாது.
தவிர, சிசிடிவி கேமரா எங்கு இருக்கிறது என்றும் இவர்களுக்குத் தெரியும். ஜிப்பா நபர் பணக்கட்டுக்களைத் தூக்கி பாக்கெட்டில் வைக்கும்போது மற்றவர்கள் அவர் சிசிடிவி கேமராவில் தெரியாதபடி அரண்போல் சுற்றி நின்றுகொள்வார்கள். பணம் பாக்கெட்டிற்குள் போனவுடன் அவரைச் சுற்றிவளைத்து வெளியில் தெரியாதபடி நடந்து சென்று கழிவறைக்குள் மறைத்து வைப்பார்கள். இரவானதும் அங்கிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
இப்படியே, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த திருட்டை அரங்கேற்றியிருக்கிறார்கள். அவர்கள் திருடிய பணத்தின் மதிப்பு பற்றி இதுவரை அதிகாரிகள் வாய் திறக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனாவோ, 5000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. பல அர்ச்சகர்களும் இதற்கு உடந்தை. ராமர் பெயரில் அர்ச்சனையும் செய்துவிட்டு, அவரது பெயரைச் சொல்லி கொள்ளையும் அடித்திருக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார்.
சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவோ, 'ராமர் கோயில் உண்டியல் பணம் திருடப்பட்டிருப்பது என்பது பா.ஜ.க.வின் ஆணி வேர் மீதான தாக்குதல். இனி ராமரே பா.ஜ.க. ஆட்சிக்கு வேட்டு வைத்துவிடுவார். சமாஜ்வாடி ஆட்சி அமைந்தவுடன், அயோத்தியை சியாராம் தாம் என்கிற பெயரில் ஆன்மிக நகரமாக்குவோம்' என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முதல்வர் யோகி, ‘அகிலேஷ் யாதவ் முதலில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமிக்கு ஆதரவளித்து தன்னை ஒரு இந்துவாக நிரூபிக்கட்டும். 1990ல் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? பாபர் மசூதிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் இதுபற்றி பேச தகுதியற்றவர்கள்' என்று காட்டமாக பதில் கொடுத்திருக்கிறார்." என்றனர் விரிவாக.
ஆனாலும், ராமர் கோயில் உண்டியல் பணத்திருட்டு பா.ஜ.க.வின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.