Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பட்டினப்பாக்கத்தில் மீண்டும் ஒரு சம்பவம்.. மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம்

By nagalekshmi
23 Dec 2024, 09:20 AM
குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் 29-வது பிளாக் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.  நேற்றிரவு இவர் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது  மூன்றாவது தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மோகன் படுகாயமடைந்தார்.  இவரை அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு  சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டினப்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

முன்னதாக கடந்த 4-ஆம் தேதி இதே பகுதியில் ஜன்னல் சிலாப் இடிந்து விழுந்ததில் 23 வயதான சையத் குலாம் என்ற இளைஞர் உயிரிழந்தார். அதாவது, பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த சையத் குலாம், எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  133-வது பிளாக் குடியிருப்பு அருகே வரும் போது அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்த ஜன்னல் சிலாப் இடிந்து சையத் குலாம் தலையில் விழுந்தது. 

இதில், படுகாயமடைந்த சையத் குலாம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உயிரிழந்த சையத் குலாம் குடும்பத்திற்கு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஐந்து லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவித்திருந்தார். 

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டித்தரப்படும் வீடுகள் தரமற்றதாக இருப்பதாகவும் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாகவும் திரைக்கதை அமைந்திருக்கும். அந்த வகையில் தான் தற்போதுள்ள குடிசை மாற்று வாரியத்தின் வீடுகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், தரமற்ற வீடுகளால் பல உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பொழுது அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் மீது தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.