Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. 20-ஆம் தேதிக்குள் விரிவான பட்டியலை வழங்க அறிவுறுத்தல்

By nagalekshmi
10 Jan 2025, 04:01 PM
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் வரும் 20-ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும்  என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த நடிகர் விஜய் தற்போது தனது நடிப்பு பயணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியல் பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘2026 சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு’ என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதை விஜய் உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் விஜய் தனது கட்சி கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, அக்டோபரில் ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ முதல் மாநாடு நடைபெற்றது. இதில், விஜய் பேசியதை ஒரு தரப்பினர் விமர்சித்தும் ஒரு தரப்பினர் வரவேற்றும் இருந்தனர். இதுஒருபுறம் இருக்க தலைவர்கள் பிறந்த நாள், பண்டிகைகள், சமூக அநீதி ஆகியவற்றிற்கு எதிராக விஜய் தனது கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்டும் வருகிறார்.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளார். இருப்பினும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் ஆளும் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்காத நிலையில் என்.ஆனந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்,  வரும் 20-ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும்  என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும்,  மாவட்ட பொறுப்பாளர்கள், அமைப்பு  நிர்வாகிகள், செயற்குழு நிர்வாகிகள் என நிர்வாகிகளை நியமனம் செய்ய மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார். மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்படும் நபர்கள் தங்களுடைய மாவட்டத்தில் நிர்வாகிகளுடன் கலந்து பேசி மாவட்ட அளவில் துணை செயலாளர்கள் இருவரையும்,பொருளாளர் என ஒருவரையும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கட்சி சார்பில் மாவட்ட தலைமை நிர்வாகிகளை அறிவித்த பின் எப்படி ஒன்றியம், வட்டம், பகுதி என நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என விரிவான தகவல்கள் மாவட்ட பொறுப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.