Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

விஜய்யை சந்திக்க த்ரிஷா போல இருக்க வேண்டும்.. நல்லசாமி ஆதங்கம்

By Jayakumar
21 Jun 2025, 06:34 PM
தவெக தலைவர் விஜய் யானையில் அமர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க நான் த்ரிஷா, நயன்தாரா போன்று இருக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கள் ஆதரவாளராக இருந்த வைகோ தற்போது எதிர்பாளராக மாறியுள்ளார். கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் என வைகோ எங்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு நிரூபித்துவிட்டால் எண்களின் நிலைப்பாட்டை மாற்றி வைகோவுக்கு ரூ.10 கோடி பரிசு கொடுப்போம்" என்றார்.

மேலும், "'மா' விலை குறைவுக்கு காரணம் மாங்காயை கார்பெட் கல் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. அதை மக்கள் வாங்கி பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் தான் 'மா' விலை குறைந்ததுக்கு காரணம்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தவெக தலைவர் விஜய்க்கு கள் நிலைப்பாடு குறித்து 15 முறை கடிதம் எழுதியும் தற்போது வரை பதில் இல்லை. பொதுச்செயலாளர் ஆனந்தின் எண்ணை தொடர்பு கொண்டபோது அவரின் உதவியாளர்கள் தான் அழைப்பை எடுக்கிறார்கள். விஜய் கள் தொடர்பாக எந்த நிலைபாட்டில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.

தவெக தலைவர் விஜயை நேரில் சந்திக்க முடியாது. அவர் யானையில் அமர்ந்துள்ளார்‌, நாங்கள் கீழே அமர்ந்துள்ளோம். அவரை சந்திக்க நான் நயன்தாரா, திரிஷா போன்று இருக்க வேண்டும். நாங்கள் சாதாரணமானவர்கள் என்பதால் எங்களுக்கான மரியாதை இல்லை" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளில் விவசாய துறை சாதனையாளர்கள் என ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் சினிமாவில் பல துறைக்கு வழங்கப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்திற்கு 50 விழுக்காடு விருது ஏன் ஒதுக்கக்கூடாது என எந்த அரசியல் தலைவரும் கேட்கவில்லை. ஏன் என்றால் எங்களை பல்வேறு விவசாயிகளாக பிரித்துவிட்டனர்" என்றார்.