தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அலெர்ட் !

By Santhosh
11 Nov 2026, 02:55 PM
தமிழ்நாட்டில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்த முக்கிய வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11) ஒருசில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

இன்று (நவம்பர் 11) திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையுடன் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதியிலும் இதே வானிலை நிலவக்கூடும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதர தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்று (நவம்பர் 11) மற்றும் நாளை (நவம்பர் 12) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, வரும் நவம்பர் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளை ஒட்டியும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருகின்றன.

வெப்பநிலை எப்படி இருக்கும்?

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இருப்பினும், வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடிய வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.