தமிழ்நாடு

பணத்திற்காக காவலர் செய்த காரியம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

By nagalekshmi
18 Dec 2024, 04:25 PM
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு பணத்திற்காக காவலர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போதைப்பொருள் கடத்தல் மீதான நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பிடிப்பட்ட நபருக்கு தெரிந்த பெண் ஒருவர் அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா கடத்தி வந்த அப்பெண்ணையும் கைது செய்தனர்.  விசாரணையில் கைதானவர்கள் பெரம்பூரைச்  சேர்ந்த பாலசுப்பிரமணியன், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா பேகம் என்பதும் தெரியவந்தது. 

இதில் பாலசுப்பிரமணியன் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் போதைபொருள் கடத்தல் வழக்கும், மும்பையில் தங்கம் கடத்திய வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும்  கைதான பாத்திமா பேகத்திடம் அசாமில் இருந்து சாய்தீன் என்பவர் போதைப் பொருளை கொடுத்து அனுப்பி உள்ளார் என்றும் ரயில் மூலம் போதைப்பொருளை கடத்தி வரும் பாத்திமா பேகம் அதனை உரியவர்களிடம் கொடுத்துவிட்டு திருப்பி சென்றுவிடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது சிக்கிக் கொண்ட நிலையில் கைதான இருவரிடம் இருந்தும்  700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், 6.5 கிலோ கஞ்சா, மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில்,  கைதான பாலசுப்பிரமணியனுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கொடுத்தது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் அருண் பாண்டியன் என்பது தெரியவந்தது. 

எழும்பூர் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை அருண் பாண்டியன் கைதான பாலசுப்பிரமணியனுக்கு இரண்டு லட்சத்து ஐந்தாயிரத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, காவலர் அருண் பாண்டியனிடம் எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.