Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஊழல் முறைகேடு.. தமிழ்நாடு அரசு நிலைப்பாடு என்ன..? நீதிபதி சரமாரி கேள்வி

By nagalekshmi
16 Dec 2024, 03:10 PM
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும்  ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். 

இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகள் தயாரித்த பொருட்களை  விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியது தொடர்பாக செய்தி தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் அறிக்கையை தாக்கல் செய்தார்.  முறைகேடு தொடர்பாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் கடந்த 13-ம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது? இத்தனை நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும்  ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? இது போன்ற புகார்களை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்கிறதா? என கேள்வி எழுப்பினர்.  தவறிழைத்த அதிகாரிகள்  அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக்கூடாது எனவும், இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார்கள்.

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், 2022-ம் ஆண்டு மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை வெளியானதில் இருந்து, அதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு தற்போது வரை தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுவதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.