தமிழ்நாடு

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

By Christon
30 Jun 2025, 09:09 PM
ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர். இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வனராஜா என்பவரின் மகள் விஜயஸ்ரீ என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏடிஜிபி கைது:

இந்த விவகாரத்தில் தனுஷ்ஷின் தம்பி சிறுவனை ஏடிஜிபி வாகனத்தில் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான ஜெகன் மூர்த்தி ஆகியோர் கடந்த 16 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், ஏடிஜிபி ஜெயராமனை மட்டும் கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை அடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஜெயராமனை அன்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்போடு திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி நள்ளிரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்ஜாமின் மனு தள்ளுபடி -தலைமறைவு:

இதனைத்தொடர்ந்து, சிறுவன் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் வழங்கக்கோரி ஜெகன் மூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம், ஃபோன் உரையாடல்களில் இருந்து, இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன எனக் கூறி, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனால் கைது செய்யப்படுவோம் என எண்ணிய பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 4 தனிப்படைகள் அமைத்து போலீஸார் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் - உச்சநீதிமன்றம்:

சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், ஜெகன் மூர்த்தியை கைது செய்ய தடை விதித்து, முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ரூ.25,000 பிணைத்தொகை செலுத்தி வழக்கமான ஜாமினை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.