Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை அபகரித்து அட்டூழியம்

By Jayakumar
17 Apr 2025, 09:06 AM
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் படகு எஞ்சின் டிரைவர் செந்தில், சாமுவேல், ராமகிருஷ்ணன், ஜெகன் ஆகிய நான்கு மீனவர்களும் கடந்த 15ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து நேற்று இரவு 10:30 மணிக்கு திரும்பும் போது இந்திய எல்லைக்குள் வந்த தமிழக மீனவர்களின் படகை வழிமறித்த கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீனவர்களை கத்தி, கட்டையை கொண்டு தாக்கி ஜிபிஎஸ் கருவி மற்றும் மீன்களையும் அபகரித்து சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் செந்தில் என்ற மீனவருக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற மீனவர்களுக்கு கைகள் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மீனவர்கள் கோடிக்கரை படகு துறைமுகம் வந்தனர். கோடிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை தாக்கிய சம்பவம் கோடிக்கரை கடற்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.