Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

புழல் சிறை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு...!

By VASUKI
21 Jan 2025, 06:12 PM
தடை செய்யப்பட்ட செலஃபோன் , கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறை வளாகத்திற்குள் கண்டறியப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்டோரின் உடல் நிலை தொடர்பாக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் அளித்த அறிக்கையை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் தாக்கல் செய்தார்.  அதில், பிலால் மாலிக் உடலில் கடுமையான காயங்கள் இருப்பதாகவும், பன்னா இஸ்மாயில் மற்றும் மற்றொரு கைதியின் உடலில் லேசான காயங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வாதிட்ட கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமையில்  குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  மேலும், தடை செய்யப்பட்ட செல்ஃபோன் , கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறை வளாகத்திற்குள் கண்டறியப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதனையடுத்து, மூவரும் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வேலூர் சரக டிஐஜியின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.