Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

காதலுக்கு சம்மதம் அளிக்காததால் விபரீத முடிவு?.. மருத்துவ மாணவர் மரணத்தில் அதிர்ச்சி தகவல்

By leninakathiya
04 Sep 2024, 08:54 PM
விடுதியில் விஷ ஊசி செலுத்திக்கொண்ட மருத்துவ மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், காதலுக்கு பெற்றோர் சம்மதம் அளிக்காததால் விபரீத முடிவு எடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (29). சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பொது மருத்துவம் (MD) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஓமாந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாக, மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இவருடன் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மாரிமுத்து என்ற மாணவருடன் தங்கியுள்ளார்.

வழக்கம் போல மாணவர் அரவிந்த், கல்லூரி மற்றும் பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நேற்றிரவு விடுதி உணவகத்தில் உணவு அருந்திவிட்டு அறைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மாரிமுத்து அறைக்கு வந்து, பல முறை தட்டியும் கதவு திறக்காததால் எதிரே உள்ள மற்றொரு நண்பர் அறையில் அறையில் தூங்கிவிட்டு, இன்று காலை மீண்டும் அறை கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் நண்பர்கள் இணைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் அரவிந்த் மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், வலது கையில் அரைஞாண் கயிறு கட்டப்பட்டு அந்த கயிறு கட்டிலில் கட்டப்பட்டிருந்தது.

இது குறித்து சக மாணவர்கள் உடனடியாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில் அரவிந்த் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அங்கு, மருந்து ஏற்றி பயன்படுத்தப்பட்ட ஊசி ஒன்றும் கிடந்துள்ளது. இதனையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட அரவிந்தின் தந்தை சுந்தரபாரதி கூட்டுறவுத் துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்தது.

மேலும், மருத்துவ மாணவர் அரவிந்த், தனது அத்தை மகளை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தால் மன உளைச்சலில் இருந்தாகவும், போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று இரவு மருத்துவ மாணவர் அரவிந்த் நீண்ட நேரமாக அவரது பெற்றோர் மற்றும் தாய் மாமனிடம் பேசியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் காதல் விவகாரம் குறித்து கூறியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மாணவரின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என இறந்துபோன மாணவரின் செல்போனை ஆய்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், முழுமையான விசாரணைக்கு பிறகே உயிரை மாய்த்துக்கொண்டதற்கான, உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, சொந்த மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.