தமிழ்நாடு

ப்ரமோஷன் வேண்டாம்.. வாரி குவிக்கும் பில் கலெக்டர்கள்.. நடவடிக்கை பாயுமா?

By Christon
21 Aug 2026, 07:53 AM
கோவையில் காலி மனை வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம், உள்ளாட்சித் துறை முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
அரசுத் துறைகளில் வழக்கமாகப் பதவி உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கும் சூழலுக்கு மத்தியில், பில் கலெக்டர்கள் பதவி உயர்வைக்கூட விரும்பாமல் அதே பதவியில் தொடர ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. காலி மனை வரி விதிப்பு, புதிய கட்டட மதிப்பீடு உள்ளிட்ட பணிகளில் நிலவும் லஞ்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடான வருவாய் ஈட்டுவதே இதற்கு முக்கியக் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குச் சான்றாகக் கோவையில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் நடத்தப்பட்ட நடவடிக்கை அமைந்துள்ளது. கோவையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சுந்தராபுரத்தில் மினி திரையரங்கம் கட்டுவதற்காக 39 சென்ட் காலி நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். கட்டடம் கட்டும் முன் காலி மனை வரி செலுத்துவதற்காக அங்குள்ள வரி வசூல் மையத்தில் பணிபுரியும் யமுனாதேவி என்ற பில் கலெக்டரை அணுகியுள்ளார். அப்போது, வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய பணத்தை யமுனாதேவியிடம் கொடுத்தபோது, கூடுதல் எஸ்பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாநகராட்சியில் புதிய கட்டட மதிப்பீடு மற்றும் வரி வசூல் பணிகளை மேற்கொள்ளப் பில் கலெக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே இருந்த 65 பணியாளர்களில், உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாகக் கடந்த வாரம் நீக்கப்பட்ட 54 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் பில் கலெக்டர்கள் ஆவர். இதனால் தற்போதுள்ள 30 ஊழியர்களே தலா 3 வார்டுகளைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆள் பற்றாக்குறையைச் சாதகமாகப் பயன்படுத்தி, சிலர் பினாமிகளை நியமித்து முறைகேடான வருமானத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடுகளுக்குச் சதுர அடிக்கு ரூ.10 முதல் 15 வரையிலும், கடைகளுக்கு ரூ.20 முதல் 30 வரையிலும் லஞ்சமாகக் கொடுத்தால் மட்டுமே கோப்புகள் அடுத்த கட்டத்திற்கு நகர்வதாகக் கூறப்படுகிறது.

உயர் அதிகாரிகள் வரை இந்தப் பணப் பரிமாற்றத்தில் பங்கு பிரித்துக் கொள்ளப்படுவதாலேயே கீழ்நிலை ஊழியர்கள் பாதுகாக்கப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். முதலமைச்சர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள துறையிலேயே இத்தகைய லஞ்சக் குற்றச்சாட்டுகள் எழுந்து கைதாகியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றசாட்டுகள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.