Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கோவில் திருவிழாவிற்கு எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

By VASUKI
11 Mar 2025, 08:45 PM
தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை என்னுமிடத்தில் உள்ளா மகாமாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடத்தக் கோரி பாரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Read More: தொடரும் பாலியல் குற்றச்சாட்டு.. 25 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நீக்கம்..!

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட சாதியினர், தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதால், அறநிலையத் துறை தரப்பில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால் அறநிலையத் துறையே விழாவை நடத்தும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டு திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாதி என்பது மதமல்ல என ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது. அதை மற்ற பிரிவினர் தடுக்க கூடாது எனக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Read More: பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள்  தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.