Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னையில் மூதாட்டி மற்றும் பேரன் மீது தாக்குதல் – 2 பேர் கைது!

By VASUKI
14 Jun 2025, 10:00 PM
சென்னையில் இரவு நேரத்தில், வயதான மூதாட்டி மற்றும் அவரது பேரனை தாக்கிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் நரேந்திரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜூன். 12 ஆம் தேதி இரவு நரேந்திரன் வேலை முடித்துவிட்டு அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அதே தெருவில் குடியிருக்கும் 2 நபர்கள் தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை பார்த்து தகாத வார்த்தையால் பேசிக் கொண்டும், தெருவில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை காலால் மிதித்து தள்ளி விட்டும் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர்.

நரேந்திரன் அந்த 2 நபர்களிடம் சென்று தகராறு செய்ய வேண்டாம் எனக் கூறவே அவரை தகாத வார்தையால் பேசி தாக்கினர், அவரை காப்பற்ற வந்த பாட்டி முருகம்மாளையும் அடித்து கீழே தள்ளி விட்டனர்.

இருவரும் வலி தாங்க முடியாமல் சத்தம் பேடவே, அந்த தெருவில் இருந்தவர்கள் ஓடி வந்து பிடிக்க முயன்ற போது தெருவில் இருந்த தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டிக் டிரம்களை உடைத்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நரேந்திரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மதுரவாயலைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், சையது அபுதாயர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் இதே காவல் நிலையத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (ஜூன்.13) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.