Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

முறைகேடு வழக்கு.. அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்

By nagalekshmi
17 Dec 2024, 04:27 PM
கனிமவள முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது அவரது மகன் கௌதம் சிகாமணி உடன் இணைந்து ஐந்து குவாரிகளுக்கு லைசன்ஸ் வழங்கி முறைக்கேட்டில் ஈடுபட்டதுடன் அரசுக்கு 25 கோடியே ஏழு லட்சம் ரூபாய்  இழப்பீடு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 2011 - ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த ஜூலை 17-ஆம் தேதி அமைச்சர் பொன்முடி அவரது மகன்  கௌதம் சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் காட்டப்படாத 81 லட்ச ரூபாயும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வங்கி கணக்கில் வைத்திருந்த 41 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

இந்த சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மூன்று முறை சம்மன் அளித்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்  கௌதம் சிகாமணி ஆகியோரிடம் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. 

இதையடுத்து 14 கோடியே 21 லட்சம்  ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. அதில் கௌதம் சிகாமணியின் உறவினரான கே.எஸ் ராஜா மகேந்திரனின் அசையா சொத்துக்கள் ஐந்து கோடியே 74 லட்ச ரூபாய் மற்றும்  கௌதம் சிகாமணியின் மனைவி தொடர்பான நிறுவனம், அசையும் சொத்துக்கள், வைப்பு நிதி மற்றும் வங்கி கணக்கில் இருந்த தொகை என  எட்டு கோடியே 74 லட்ச ரூபாய் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்து இன்று (டிசம்பர் 17) மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில்,   ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக ஆஜரானார். இவரிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.