தமிழ்நாடு

செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர்... தமிழக காங்கிரஸில் அதிரடி மாற்றம் !

By Sumalekha
27 Jun 2026, 09:03 PM
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையும் தனது தொகுதியில் தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து டெல்லி மேலிடம் அதிருப்தி அடைந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) ஆதரவு அளித்ததுடன், புதிய அரசின் அமைச்சரவையிலும் இடம்பிடித்தது.

தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறப்பட்டது. அப்போது, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், டெல்லி மேலிடம் வேறு முடிவை எடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமித்து கட்சி மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தவெக கூட்டணி அமைந்த பிறகு, காங்கிரஸ் மீது திமுக முன்வைத்த விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம், தமிழக காங்கிரஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பேசுப் பொருளாகியுள்ளன.