திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்று (நவம்பர் 23) இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மதுரை மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட குற்றவியல் நடுவருமான நிஷாந்த் கிருஷ்ணா, இதற்கான உத்தரவை இன்று (நவம்பர் 23) பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் – பதற்றத்தைத் தடுக்க நடவடிக்கை!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் திரண்டு வருவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.
மேலும், மதுரை மாநகரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த இரு சமூகத்தினரும் அதிக அளவில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால், மதுரை மாநகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, பெரிய அளவில் மக்கள் திரள்வதால் மோதல் ஏற்படவும், அதன் தாக்கம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன?
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மதுரை மாவட்ட எல்லைக்குள் அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தர்ணாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் ஏறிச் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எப்போது முதல் தடை உத்தரவு அமல்?
இந்தத் தடை உத்தரவு இன்று நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளுக்கு இந்த உத்தரவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மதச் சடங்குகள் மற்றும் மத ஊர்வலங்களுக்கும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோயில் வழிபாடுகளுக்கு விலக்கா?
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கோயில் நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் வழக்கமான சடங்குகள், திருவிழா நிகழ்வுகளுக்கும் தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா உள்ளிட்ட பிற வழிபாட்டுத் தலங்களின் வழக்கமான மத வழிபாடுகள், சட்டப்பூர்வமான மத நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான அணுகல் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் காவல்துறையின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டிருக்கும்.
குறிப்பாக, நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் இந்தத் தடை உத்தரவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு தரப்பினர் திரள வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால், மதுரை மாவட்டம் முழுவதும் இன்று இரவு முதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.