Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

By nagalekshmi
17 Apr 2025, 01:54 PM
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, குணால் கம்ரா மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தனக்கு டிரான்சிட் முன் ஜாமின் (வேறு மாநிலத்தில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு) கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் மனு தாக்கல் செய்துள்ளார் .

அந்த மனுவில், விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும் மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என்பதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குணால் கம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குணால் கம்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், வழக்கை ரத்து செய்ய கோரி குணால் கம்ரா தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப் பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வரும் வரை குணால் காம்ராவை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதால் இங்கு வழக்கை தொடர்ந்து நடத்த அவசியமில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.