Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி...எச்சரிக்கையை மீறிய செயலால் பரபரப்பு

By Jayakumar
10 Jun 2025, 10:03 AM
சென்னையில் மூன்றாவது முறையாக தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு புனேயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 178 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னையில் தரையிறங்க வந்து கொண்டு இருந்தது. விமானம் அதிகாலை 1.10 மணியளவில், சென்னையில் தரையிறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்து தாழ்வாகப் பறந்து கொண்டு இருந்தது.

விமானம் மீது லேசர் ஒளி

அப்போது கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி பீய்த்து அடிக்கப்பட்டது. இதையடுத்து நிலை குலைந்த விமானிகள், அடுத்த சில வினாடிகளில் தங்களை சுதாகரித்துக் கொண்டனர். உடனடியாக தாழ பறந்து கொண்டிருந்த விமானத்தை, மீண்டும் வானில் பறக்கச் செய்தனர்.

அதோடு விமானிகள் அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல் நிலையம் மற்றும் விமான பாதுகாப்புத்துறையான பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அலுவலகம் ஆகியவற்றுக்கும் அவசரமாக தகவல் தெரிவித்தனர்.

தரையிறங்க தாமதம்

இந்த நிலையில் அந்த லேசர் லைட் ஒளி அடுத்த சில வினாடிகளில் மறைந்து விட்டது. இதையடுத்து, விமானி விமானத்தை பத்திரமாக சென்னை விமான நிலையத்தில், அதிகாலை 1.20 மணிக்கு தரையிறக்கினார். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறங்கிச் சென்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில், சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, பரங்கிமலை மற்றும் கிண்டி காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து, அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்த நேரத்தில் இதுபோன்ற லேசர் லைட் ஒளி எங்கிருந்து அடிக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

எச்சரிக்கையை மீறிய செயல்

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் அடிக்கடி தரையிறங்கும் விமானங்கள் மீது நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் லேசர் லைட் ஒளிகளை பீய்ச்சி அடித்து, விமானங்கள் தரையிறங்குவதற்கு இடையூறுகளை சமூக விரோத கும்பல்கள் ஏற்படுத்திக்கொண்டு இருந்தனர். அதன் பின்பு விமான நிலைய அதிகாரிகளும் போலீசாரும் எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் இல்லாமல் இருந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்கும் போது, லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இது மூன்றாவது சம்பவம் ஆகும். இந்த நிலையில், விமானங்கள் மீது லேசர் ஒளியை அடிக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்திருந்தார். அவரது எச்சரிக்கையையும் மீறி இன்று 3வது முறையாக லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.