இந்திய அரசியலிலேயே அரிதாக நடைபெறும் ஒரு மாற்றம் தமிழகத்தில் நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி, தனது முதல் தேர்தலிலேயே மக்களின் பேராதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்த அரசியல் மாற்றம், புதிய எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியது.
பதவியேற்ற முதல் நாளிலேயே மாநிலத்தின் நிதிநிலை சவாலானதாக இருப்பதாகவும், அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார். நிதி அமைச்சர் மரிய வில்சன் அதை வெளியிடவும் செய்தார். புதிய அரசு எதிர்கொள்ளும் நிதிச் சவால்களின் தீவிரத்தை அந்த வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியது. இந்தச் சூழலில்தான், 'இது நம்ம பட்ஜெட்! நம்ம முதல்வர் விஜய்க்கு உங்கள் யோசனையை உரிமையோடு சொல்லுங்க.! தமிழக அரசு தயாரிக்கும் புதிய பட்ஜெட்டில் உங்கள் யோசனைகளும் துணை சேர்க்கட்டும்' என்கிற அழைப்பை குமுதம் தனது வாசகர்களிடம் வைத்தது.
ஜூன் முதல் வாரம் தொடங்கி, குமுதம் வாசகர்களிடமிருந்து பட்ஜெட் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன. வாட்ஸ்அப், மின்னஞ்சல், ஃபேஸ்புக், அஞ்சல் கடிதங்கள் மூலம் என ஆயிரக்கணக்கான கருத்துகள் குமுதம் அலுவலகத்தை வந்தடைந்தன. வாசகர்களோடு, பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் தங்களது துறை சார்ந்த பரிந்துரைகளை வழங்கினார்கள்.
அவற்றில் முக்கியமான பல பரிந்துரைகள் குமுதம் இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அவற்றோடு இதழில் இடம் பெறாத மற்றும் பலரின் மதிப்புமிக்க கருத்துகளையும் சேர்த்துத் தனியாக ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டது. நம்ம முதல்வர் என்கிற உரிமையோடு அந்த வாசகர் எண்ணங்களை நேரடியாக முதல் வரிடமே வழங்க எண்ணினோம். உடனே முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம்.
தேதி காலை 10:45 மணியளவில் முதல்வரை நேரில் சந்தித்து பட்ஜெட் பரிந்துரைகளை வழங்கலாம் என்ற தகவல் கிடைத்தது. குமுதம் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் வரதராசன் பார்த்தசாரதி, செயல் துணைத் தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், குமுதம் டிஜிட்டல் பிரிவின் தலைவர் பா.ராஜநாராயணன், குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர் டி.எல்.சஞ்சீவி குமார் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்திக்க நேரம் அளிக்கப்பட்டது.
அதற்கேற்பக் கிளம்பத் தயாரான நிலையில், முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு. சந்திப்பு காலை 1100 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மிகுந்த அக்கறையோடும் பொறுப்பு உணர்வோடும் தெரிவித்தார்கள். வெறும் பதினைந்து நிமிட மாற்றத்திற்குக்கூட வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்ட அந்த அணுகுமுறையானது, மனிதர்களையும், நேரத்தின் நொடிகளையும் இந்தப் புதிய அரசு எவ்வளவு மதிக்கிறது என்பதை உணர்த்தியது.
சரியாகக் காலை 11.00 மணி. முதல்வர் ஜோசப் விஜய் அறைக்குள் வந்தார். 'முதலில் நீங்கள் அமருங்கள்' என்று நம் அனைவரையும் உபசரித்து, சந்திக்க வந்தவர்கள் அமர்ந்த பிறகே
தனது இருக்கையில் அமர்ந்தார். அந்தச் சிறிய செயல்கூட, அவரது எளிமையையும் பணிவையும் வெளிப்படுத்தியது. குமுதம் வாசகர்கள் வழங்கிய பட்ஜெட் பரிந்துரைகள் தொகுப்பை முதல்வர் ஜோசப் விஜய் மிகவும் கவனமாக வாங்கிப் பார்த்தார். ஒவ்வொரு பக்கத்தையும் மெதுவாகப் புரட்டிப் படித்தார்.
பல பரிந்துரைகளை ஆர்வத்துடன் கவனித்தார். மகிழ்ச்சியுடன், தொகுப்பின் கடைசிப் பக்கத்தில் சிறு குறிப்புடன் 'பிரியமுடன் விஜய்' என்று கையெழுத்திட்டு வைத்துக்கொண்டு, வாழ்த்து தெரிவித்தார். சுமார் இருபது நிமிடங்கள் நடைபெற்றது இந்தச் சந்திப்பு. அதில் அதிக நேரம் மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பதற்கே அவர் செலவிட்டார். அந்த இருபது நிமிடமும் குமுதம் குழுவினரையும் முதல்வரையும் தவிர அங்கே மற்ற அதிகாரிகளோ, செயலர்களோ, உதவியாளர்களோ இல்லாதது பெரும் வியப்பு!
விடைபெறும்போது, அறையின் வாசல் வரை வந்து அவர் வழியனுப்பிய பாங்கும் அந்தச் சந்திப்புக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. ஒரு வார இதழின் வாசகர்கள் அன்போ டு அனுப்பி வைக்கும் யோசனைகளை, ஓர் அரசு இவ்வளவு அக்கறையோடு பெற்றுக் கொள்கிறது என்பதும், அதையும் ஒரு முதல்வரே உடனடியாகக் கவனத்துடன் பெற்று கவனிக்கிறார் என்பதும்... அந்த வாசகர்களுக்கு இந்த அரசும், மாநில முதலமைச்சரும் செய்த உள்ளார்ந்த மரியாதையாகவே பார்க்கத் தோன்றுகிறது.
இந்த முயற்சியில் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்த ஒவ்வொரு வாசகருக்கும் குமுதம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆக்கபூர்வமான ஒரு நிதிநிலை அறிக்கையை ஜோசப் விஜய் அரசு தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்!