தமிழ்நாடு

குப்பையில் வீசப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்- அதிமுக கண்டனம்

By Jayakumar
29 Jun 2025, 08:46 PM
அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மின்பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு விழாவை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக கண்டனம்

அரசு அதிகாரிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து அலுவலகத்திற்கு பின்புறம் குப்பைத்தொட்டியில் வீசியது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் ஜெயலலிதாவை அவமானப்படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம். மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படங்களை குப்பைத் தொட்டியில் வீசினால், ஜெயலலிதாவின் சாதனைகளை மறைத்துவிட முடியுமா?

அதிமுக தக்க பதிலை தரும்

2006-11 திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் ஜெயலலிதா. மின்வெட்டு தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக்கியவர். ஆட்சிக்கு வந்தது முதல் மின் கட்டண உயர்வை மட்டும் சரியாக செய்யும் இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அவமானச் செயலுக்கு, தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக தக்க பதிலை 2026-ல் தரும்” என கூறப்பட்டுள்ளது.