Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வரலாறு மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

By Jayakumar
10 Jun 2025, 03:33 PM
வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பரவலான வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2047ல் முன்னேறிய நாடாக இந்தியா திகழும் நோக்கோடு செயல்பட்டு வருகிறோம். மோடியின் செயல்பாடுகள் அனைத்தும், பொதுமக்களின் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு இருந்து வருகின்றன.

அதிக ஆய்வும், முடிவுகளும் தேவை

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சிறந்த நிர்வாகத்தை மோடி வழங்கி வருகிறார். கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், மக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. ஊழலற்ற, வெளிப்படைத் தன்மையான அரசாக மோடி அரசு உள்ளது என்றார்.

கீழடி குறித்து பேசிய அமைச்சர், தமிழ் மொழியின் தொன்மை, வரலாறு, தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் குறித்து பல வகையான ஆய்வுகள் கீழடியில் நடந்த போதும்கூட இன்னும் அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவைப்படுகின்றன. அப்படி அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான அதிகமான மேலும் ஆய்வுகளும், முடிவுகளும் கிடைக்கும்போது, தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிப்பதற்கு தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது எனக்கூறினார்.

ஏன் இத்தனை தயக்கம்?

இந்த நிலையில், மத்திய அமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள்.

கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது. 5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள்.

வரலாறு மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது

வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? “ என தெரிவித்துள்ளார்.