Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!

By VASUKI
21 Mar 2025, 01:50 PM
முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான  வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சாலை மறியல் மற்றும் ரயில் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி இந்த போராட்டம் நடந்ததாக கூறி அரியலூர் போலீசார்  அப்போதைய மாவட்ட செயலாளர் தற்போதைய அமைச்சருமான சிவசங்கர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 
மேலும் அரியலூர் மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்திலும் அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றதாகவும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் எனவே தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் ஆ ராசா சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த வழக்கு தொடரப்பட்ட்டுள்ளதாகவும் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .

இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி. கே.இளந்திரையன், ஆ ராசா மீதான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழக அமைச்சர் சிவசங்கர் மீதான வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.