தமிழ்நாடு

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

By VASUKI
28 Apr 2025, 06:25 PM
சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!
பள்ளிகரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரவீன், மாற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அந்த பெண்ணின் சகோதரரால் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

கணவரை இழந்த ஷர்மிளா, இரண்டு மாதங்கள் கழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரவீனை கொலை செய்த வழக்கில், ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் மற்றும் நான்கு பேரை பள்ளிக்கரணை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர்.

இந்த வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, பிரவீனின் தந்தை கோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்த வழக்கில் சாட்சிகள் மிரட்டபட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிக்கையில் சம்பவம் மறைக்கபட்டுள்ளதால் அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோபியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.