Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சாதனை படைத்த குகேஷ்.. உருவாகும் செஸ் புதிய அகாடமி.. முதலமைச்சர் அறிவிப்பு

By nagalekshmi
17 Dec 2024, 09:42 PM
அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென  சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று குகேஷ் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரனுடன் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே சாம்பியன் என்ற பட்டத்தை வெல்வர் என்ற விதிகளுடன் போட்டி தொடங்கியது. இதில், குகேஷ் மற்றும் டிங் லிரனுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இருவரும் ஆறரை புள்ளிகள் பெற்ற நிலையில், 14-வது சுற்றில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற பரபரப்புடன் போட்டி நடைபெற்றது. இதில் 18 வயதான குகேஷ் முதலில் தனது சாதுர்யமான நகர்வால் முதலில் ஏழரை புள்ளிகளை பெற்று டிங் லிரனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையும் படைத்தார். வெற்றி பெற்ற குகேஷுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய குகேஷிற்கு சென்னை விமான நிலையத்தில் எஸ்.டி.ஏ.டி (SDAD) சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷிற்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பல செஸ் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

விழாவில், உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, நமது சென்னை இளைஞர் குகேஷ் புதிய சாதனை படைத்துள்ளார். இவரது விடாமுயற்சி, உழைப்பை தமிழ்நாட்டு இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாராட்டி பேசினார். மேலும், தமிழ்நாட்டில் திறமையான செஸ் வீரர்-வீராங்கனைகளை உருவாக்க, அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென ‘Home of chess' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.