Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் ஞானசேகரன்

By nagalekshmi
26 Feb 2025, 03:46 PM
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர்.  

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து,  சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  மேலும்,  குற்றவாளி ஞானசேகரனை குரல் பரிசோதனைக்காக சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள தடயவியல் துறைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் உதவியோடு ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடைபெற்றது. 

அதுமட்டுமல்லாமல்,  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனையும் நடைபெற்றது. சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று (பிப்.25) குற்றவாளி ஞானசேகரனை சென்னை சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் 112 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் 190 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (பிப். 26) மீண்டும் ஞானசேகரனை போலீஸார் சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரிடம் கையெழுத்து பெறப்பட்டது. வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் செயல்பட்டு வரும் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து ஞானசேகரனுக்கு நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது. இதன்பிறகு ஞானசேகரன், போலீசார் பாதுகாப்போடு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

அடுத்தக்கட்டமாக ஞானசேகரனை மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர். அன்று வழக்கு விசாரணை தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரின் தாயார் கங்காதேவி, தன் மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,  காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.