தமிழ்நாடு

மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்!

By Christon
25 Apr 2026, 12:06 PM
தஞ்சாவூர் அருகே, கடந்த ஆண்டு நடந்த ஆசிரியை கொலைக்குக் காரணமான இளைஞர் பழிக்குப்பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, கடந்த ஆண்டு நடந்த ஆசிரியை கொலைக்குக் காரணமான இளைஞர் பழிக்குப்பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபநாசம் அருகே உள்ள பிராந்தை பகுதியைச் சேர்ந்த காவியா என்ற ஆசிரியை, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்குச் செல்லும் வழியில் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். காவியாவிற்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அவரது முன்னாள் காதலன் அஜித்குமார் ஆத்திரத்தில் இந்த கொடூரத்தைச் செய்திருந்தார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்குமார், சிறையில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்

தன் மகளின் கொலைக்கு எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். இன்று அதிகாலை, அஜித்குமார் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்த காவியாவின் தந்தை தலைமையிலான கும்பல், அவரைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

காவல் நிலையத்தில் சரண்

கொலைச் சம்பவத்தை முடித்த கையோடு, காவியாவின் தந்தை உட்பட நான்கு பேர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த படுகொலைச் சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.