தமிழ்நாடு

2 ஆண்டுகளாக அவதிப்பட்ட பெண்.. 27 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்

By Jayakumar
14 Jun 2025, 07:27 AM
தஞ்சாவூரில் பெண்ணின் வயிற்றிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த் திசுக் கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
தஞ்சாவூரில் உள்ள 45 வயதான ஒரு பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து சினைப்பை மற்றும் கர்ப்பப்பையோடு 27 கிலோ எடை கொண்ட நார்த்திசு திரளை அகற்றும் சிக்கலான அறுவைசிகிச்சையை தனியார் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை செய்துள்ளது. இரண்டு ஆண்டுகாலமாக இருந்த கட்டி தற்போது அகற்றப்பட்டுள்ளது.

நார்த்திசு திரள் என்பது கர்ப்பப்பையிலிருந்து உருவாகிற, ஒரு புற்றுநோய் அல்லாத திசு வளர்ச்சியாகும். தசை மற்றும் நார்த்திசுக்களால் உருவானதாக இந்த கழலைக் கட்டி இருக்கும். தசைத்திசுக்கட்டிகள் (லியோமியோமாஸ்) எனவும் இவை அழைக்கப்படுகின்றன. 2.5 இலட்சம் நபர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்தளவிற்கு தசைத்திசுக்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இந்த அறுவைசிகிச்சை ஐந்து மணி நேரங்களுக்கு மேல் செய்து இப்பெண் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

இரண்டு மகள்களுக்கு தாயான இப்பெண் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது அடிவயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய வீக்கம் உருவாகியிருப்பதை கவனித்துள்ளார். இந்த தசைத்திரளானது படிப்படியாக வளர்ச்சியடைந்து பெரிய கட்டியாக மாறியுள்ளது. அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது தனது குழந்தைகளை ஆதரவற்றவர்களாக ஆக்கிவிடும் என்ற அச்சத்துடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில், சமீப நாட்களாக இந்த தசைத்திரளானது மிகப்பெரிதாக வளர்ச்சியடைந்ததால் சுவாசிப்பதே அதிக சிரமமானதாக இருந்ததால் சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகியுள்ளார்.

பெண் பாலுறுப்பியல் துறையின் முதுநிலை நிபுணரான டாக்டர் நிர்மலாவின் தலைமையில் இயங்கிய அறுவைசிகிச்சை குழுவில் டாக்டர்கள் அரிமாணிக்கம், வினோதா தேவி ஆகியோர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து 27 கிலோ கட்டியை அகற்றியுள்ளனர்.