Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

By VASUKI
11 Jan 2025, 01:08 PM
கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தில் உள்ள பொற்தாமரை குளம்  உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தயக்கம் காட்டும் கும்பகோணம் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர். 

மாநகராட்சி ஆணையருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து ஜனவரி 27 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர்.