Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

By VASUKI
26 May 2025, 02:57 PM
வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏழு பக்தர்கள் சிக்கிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என கோவை மாவட்ட வனத்துறை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவையில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே மலையேறிய பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்த தடையை மீறி சிலர் மலையேறிவிட்டதாகவும், அவர்கள் மலையில் சிக்கிக்கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த தகவல்களை மறுத்துள்ள மாவட்ட வன அலுவலர், மலையில் யாரும் சிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், ரெட் அலர்ட்க்கு முன்பாக மலையேறிய சில பக்தர்கள் கீழே அழைத்து வரப்பட்டு வருவதாகவும், இன்று மாலைக்குள் அனைத்து பக்தர்களும் பத்திரமாக கீழே அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான மற்றும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுபோன்ற பொய்யான தகவலை நம்பவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்ட நிலையில், மழைக்காலங்கள் போன்ற, இயற்கை பேரிடர் நேரங்களில் மலையேற்றங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.