கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8 கைதிகள் மீது வழக்குப்பதிவு
குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் என்ற கைதி கடந்த ஒன்பதாம் தேதி சிறையிலடைக்கப்பட்ட நிலையில், நேற்று திடீரென உயிரிழந்தார். அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைச் சந்தேக மரணம் என்பதில் இருந்து கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.
இந்தக் கொலை தொடர்பாகச் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய மூன்று பேரை நேசமணிநகர் போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, சிறையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் விஷ்ணு, சாரதி, ஜெகன் உள்ளிட்ட 8 கைதிகளுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் 8 பேர் மீதும் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் கூடுதல் பிரிவுகளைச் சேர்க்க எப்.ஐ.ஆர் (FIR) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 3 சிறைக்காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உறவினர்களின் போராட்டம்
கைதி சபரிவர்மனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து நாகர்கோவிலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மற்றும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், சிறைத்துறை அதிகாரிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
சபரிவர்மனின் ஊனமுற்ற கை உடைக்கப்பட்டு, மார்பு மற்றும் பின்னந்தலையில் பலத்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் வரை உடலைப் பெறப்போவதில்லை என உறவினர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருக்கும் சபரிவர்மனின் தந்தையிடம் அதிகாரிகள் கட்டாயக் கையெழுத்து வாங்க முயன்ற சம்பவத்திற்கும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தால் நாகர்கோவில் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.