Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

முடிவுற்ற திட்டப் பணிகள்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

By VASUKI
04 Jul 2025, 10:07 PM
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில் கடலூர் துறைமுகத்தை இயக்குவதற்காக மஹதி கடலூர் போர்ட் அன்ட் மேரிடைம் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், 5 பயனாளிகளுக்கு விதை, பழ, பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.

வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் "ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.

மேலும், 103 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள், 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்புக் கிடங்குகள், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், 2 ஒருங்கிணைந்த விதைச்சான்று வளாகங்கள், அலுவலகக் கட்டிடம், மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வகம் உள்ளிட்ட 52 கட்டிடங்களை திறந்து வைத்தார்.

ஆயிரத்து 531 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோவை உள்ளூர் திட்டப் பகுதியின் 2வது முழுமைத் திட்டத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன.