தமிழ்நாடு

அங்கன்வாடி கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி.. அதிர்ச்சியில் பெற்றோர்

By MUTHUKRISHNAN
06 Jun 2025, 06:05 PM
அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கிய கொழுக்கட்டையில் உயிரிழந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்துள்ள சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக தயாரிக்கப்படும் கொழுக்கட்டை வழங்கப்பட்டுள்ளன.

இதனை வீட்டிற்கு எடுத்துசென்று உண்டு கொண்டிருந்தபோது திடீரென ஒரு கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த சிறுமி பயந்து போய், அவரது தாயாரிடம் கொழுக்கட்டையில் பூச்சி இருப்பதாக கூறியுள்ளார்.

அதனை பிரித்துப் பார்த்த தாயார் கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சாப்பிட்ட வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு பதட்டமடைந்த சிறுமியின் தாயார், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். முதலில் தன் பகுதிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லை என பணியாளர்கள் கூறியதோடு, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிய நிலையில் தற்போது சிறுமியை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். நல்வாய்ப்பாக சிறுமி கொழுக்கட்டையை உண்பதற்கு முன்பாக கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் குழந்தைக்கு உடல் உபாதை ஏற்படவில்லை.

இதனையடுத்து அங்கன்வாடி பணியாளர் அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். மதுரையில் அங்கன்வாடியில் வழங்கப்பட்ட கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக இருந்த பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சிறுமி சாப்பிட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி கிடந்ததாக செய்தி வெளியான நிலையில், மாவட்ட திட்ட அலுவலர் விசாரணை மேற்கொண்டார். அதனடிப்படையில், கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரத்தில் மதுரை பழங்காநத்தம் அங்கன்வாடி மைய பணியாளர் கோமதியினை சஸ்பெண்ட் செய்து மாவட்ட திட்ட அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.