தமிழ்நாடு

NLC பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு... மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் !

By Sumalekha
25 Jun 2026, 05:20 PM
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 3 சதவீதம் வரையிலான பங்குகளை ‘Offer for Sale (OFS)’ முறையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றினை முதலமைச்சர் விஜய் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்பு, நில ஒப்படைப்பு மற்றும் மாநில அரசின் உள்கட்டமைப்பு ஆதரவுடன் பல தசாப்தங்களாக வளர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், என்.எல்.சி. என்பது வெறும் பங்குச் சந்தை நிறுவனம் அல்ல; நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, கனிம வள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பங்காற்றும் தேசிய சொத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மையை பலவீனப்படுத்தும் தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும், இது மாநில மக்களின் நீண்டகால நலன்களையும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்துள்ளார்.

எனவே, என்.எல்.சி. நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பான முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான ஆட்சேபனைகளை உரிய முறையில் பரிசீலிக்கும் என நம்புவதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.