தமிழ்நாடு

குழந்தை திருமண வழக்கில் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது!

By VASUKI
24 Sep 2025, 06:53 AM
கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் கேட்ட இன்ஸ்பெக்டர்; ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் கையும் களவுமாக சிக்கினார்!
குழந்தை திருமண வழக்கில் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சிறுமியின் தாயாரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், தர்மபுரி லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாக நேற்று கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி பகுதியைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், 16 வயது சிறுமியை காதலித்து, அவரது பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அந்தச் சிறுமி கர்ப்பமான நிலையில், அவரது பெற்றோர் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சிறுமிக்குக் குழந்தை திருமணம் நடந்தது மருத்துவர்களுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, சமூக நலத்துறையினர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விசாரணைக்கு வந்த இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (50), குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யாமல் இருக்க, ரூ.50 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் என்று பேரம் பேசியுள்ளார்.

இன்ஸ்பெக்டரின் செயலால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் அறிவுரையின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் அந்தச் சிறுமியின் தாயார் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.