தமிழ்நாடு

முதல்வர் விஜய் ஜூலை 10 கரூர் பயணம்.. கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல்!

By Christon
30 Jun 2026, 08:05 AM
முதல்வர் விஜய் வரும் ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, முதலமைச்சர் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய தவெக தலைவர் விஜய், பாதுகாப்பு காரணங்களால் கரூர் செல்லாமல் அவர்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.

மேலும், தேர்தல் முடிந்த பின் நேரில் வருவதாகவும் உறுதியளித்திருந்தார். தற்போது தவெக வெற்றி பெற்று விஜய் முதல்வராகப் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கடந்தும், அவர் கரூர் செல்லாததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.

இந்நிலையில், வரும் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் கரூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள முதல்வர், கூட்ட நெரிசலில் பலியானவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று, அவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி கரூர்ப் பயணத் திட்டம், அங்குள்ள தற்போதைய அரசியல் சூழலில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்றுதான் கரூரின் அதிமுக எம்.எல்.ஏ.வான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அவர் தவெகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் காலியாகியுள்ள கரூர் தொகுதி உட்பட, தமிழகத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், முதலமைச்சரின் இந்த கரூர் வருகை அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது. மேலும், முதல்வரின் கரூர் பயணம் இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.