தமிழ்நாடு

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலை பெயரை மாற்றக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

By VASUKI
30 Apr 2025, 09:00 PM
சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலையை பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றக் கோரிய வழக்கில் எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும், வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவில், 1939 ஆம் ஆண்டு வரை தந்தை பெரியார், ஈ வே ராமசாமி என்று அழைக்கப்பட்டு வந்தார். அந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டிற்கு பிறகு பெரியார் என அழைக்கப்பட்டார். அன்று முதல் தமிழக மக்கள் ஈவே ராமசாமியை பெரியார் என்று அழைத்து சிறப்பித்து வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், சமத்துவம், பெண் விடுதலை உள்ளிட்ட சமூக முன்னேற்றத்திற்கு பெரியாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. பெரியாரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல் பூந்தமல்லி வரையில் உள்ள சாலைக்கு பெரியார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்பட்டது. ஆனால் தற்போது அந்த சாலை ஈவேரா சாலை அழைக்கப்பட்டு வருகிறது. சாலை பெயர் பலகைகளிலும் ஈவேரா சாலை இன்றே இடம்பெற்றுள்ளது. அதனால் கடந்த 1979 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட பெரியார் சாலை என்ற பெயரில் அழைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இந்த அரசு பெரியார் வழியில் செயல்பட்டு வருவதாகவும், மனுதாரர் தனது மனுவில் சில தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுப்பியுள்ளார் எனவே அவற்றை நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சுரேஷ்குமார் , மனுதாரரின் கோரிக்கையை மாநகராட்சி பரிசீலிக்கும் என தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.