தமிழ்நாடு

கோவையில் கொடூரம்: ஏழாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை.. 2 சிறுவர்கள் கைது!

By Christon
18 May 2026, 12:07 PM
கோவை அருகே மீன்பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவனை, அவனது சக நண்பர்கள் இருவர் அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் பகுதியில் கோடை விடுமுறையில் மீன்பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவனை, அவனது சக நண்பர்கள் இருவர் அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், ஆர்.ஜி. புதூர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், கடந்த மே 15-ஆம் தேதி பிற்பகல் தனது நண்பர்களுடன் சேர்ந்து இருகூர் வாய்க்காலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளான். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமான உண்மை

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனுடன் கடைசியாகச் சென்ற சக நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். சிறுவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர் விசாரணையில், வாய்க்காலில் மீன்பிடித்த போது சிறுவர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த இரண்டு சிறுவர்கள், அங்கிருந்த காலி மதுபாட்டிலால் மாணவனின் தலையில் கொடூரமாகத் தாக்கியது தெரியவந்தது. இதில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

உடல் மீட்பு மற்றும் விசாரணை

கொலையினால் பயந்துபோன சிறுவர்கள் இருவரும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, மாணவனின் உடலை அங்கேயே ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு வீட்டிற்கு வந்து மறைத்துள்ளனர். சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின்படி, இன்று (மே 18) காலை சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.