தமிழ்நாடு

நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்.. காரணம் என்ன?

By Christon
19 May 2026, 01:46 PM
நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாததால் மோட்டார் சைக்கிளை நிறுத்தச் சொன்ன போலீசாரின் மீது ஆத்திரமடைந்து, புறக்காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 17 வயது சிறுவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை - சங்கரன்கோவில் சாலையில் உள்ள மானூர் புறக்காவல் நிலையம் அருகே நேற்று (மே 18) போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரைத் தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் அச்சிறுவர்கள் புறக்காவல் நிலையத்தை நோக்கிப் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டுத் தப்பியோடினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அம்பலமான கொடூரக் காரணம்

போலீசாரின் விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியது ராமையன்பட்டி மற்றும் கண்டியபேரி பகுதிகளைச் சேர்ந்த 17 வயதான 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்த மானூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தபோது லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்கள் இல்லாததால், போலீசார் சாவியைப் பறிமுதல் செய்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், போலீசாருக்குத் தெரியாமல் வண்டியை உருட்டிச் சென்று வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர், தங்களை வண்டியை நிறுத்தச் சொன்ன ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டை வீசியதாக ஒப்புக்கொண்டனர்.

போலீஸ் நடவடிக்கை

போலீசாரின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து, அரசு உடைமைக்குச் சேதம் விளைவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக 3 சிறுவர்களையும் போலீசார் முறைப்படி கைது செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் கேட்டுப் பெற்றோரை அழைக்கச் சொன்னதற்காகச் சிறுவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நெல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.