தமிழ்நாடு

கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலம்.. கொலையா? தற்கொலையா?

By Christon
23 Sep 2025, 06:16 PM
விருத்தாசலம் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் தொங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், வீட்டில் தூக்கில் தொங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலத்தை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் மகன் காமராஜ். இவர் நேற்று இரவு, தனது வீட்டின் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் தொங்குவதைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக, கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக் கொலையா?

இளைஞர் காமராஜின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்ததால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் மருங்கூர் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.