தமிழ்நாடு

விமானத்தில் ஒலித்த அலாரம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

By Jayakumar
18 Jun 2025, 07:35 PM
கொல்கத்தா செல்லும் விமானத்தில் அவசரகால கதவை திறக்க கூடிய பட்டனை அழுத்திய கல்லூரி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காம்ராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்து நிலையில், விமானத்தின் அவசரகால கதவை திறந்தால் ஒலிக்கக் கூடிய எச்சரிக்கை அலாரம் விமானியின் அறையில் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள், உடனடியாக விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணி யார்? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது விமானத்தின் அவசரகால கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தான் அவசர கால கதவை திறப்பதற்கான பட்டனை அழுத்தியுள்ளார் என்று தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த இளைஞர் பெயர் ஓம்கார் ஷாகா (19) என்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் 2ம் ஆண்டு பயின்று வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. இவர் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு விமானத்தில் செல்கிறார் என்றும் தெரிய வந்தது. மேலும் மாணவர், நான் எமர்ஜென்சி டோரை திறக்க வேண்டும் என்று பட்டனை அழுத்தவில்லை. தெரியாமல் என் கை பட்டு, பட்டன் அழுந்திவிட்டது என்று கூறினார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள், மாணவரின் விளக்கத்தை ஏற்காமல் அவரை விமானத்திலிருந்து வெளியேற்றினர். அதன்பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், 163 பயணிகளுடன், சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட கல்லூரி மாணவரை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார், மாணவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவர், தான் தவறுதலாக அந்த பட்டனை அழித்தி விட்டதாக கூறி, என்னை மன்னித்து அனுப்பி விடுங்கள் என்று, போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் மாணவரிடம் இது போன்ற தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி கொண்டு அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.